சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கான இலங்கை கொன்சல் ஜெனரலாக வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமித்துள்ளமை தொடர்பில், முஸ்லிம் சமூகத்தினரிடையே பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.
இதுவரை ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளுடன் தொடர்புடைய நிர்வாக நடவடிக்கைகள், புனித பிரதேசங்களில் இடம்பெறும் அதிகாரப்பூர்வ பணிகள் உள்ளிட்டவற்றை திறம்பட முன்னெடுக்க, இஸ்லாம் மதம் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த பரந்த அறிவைக் கொண்ட முஸ்லிம் தூதரே ஜித்தா கொன்சல் ஜெனரலாக நியமிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தப் பதவியில் முன்னதாக ஷேக் நயீமுதீன் சேவையாற்றியிருந்தார்.
இந்தப் பதவியின் கீழ், மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு மேற்கொள்ளப்படும் அதிகாரப்பூர்வ வருகைகள் உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகள் இடம்பெறுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், தற்போதைய நியமனம் தற்காலிகமானது எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும், குறித்த பதவிக்குத் தகுதியான ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்படும் வரை, வெளியுறவு அமைச்சக அதிகாரியான சேனநாயக்க தற்காலிகமாக ஜித்தா கொன்சல் ஜெனரல் பதவியை வகிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்


0 Comments