தொழில் புரியும் இடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 190 (C190) இலக்க சமவாயத்தை அரசாங்கம் அங்கீகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் பின்னணியில், அதன் ஊடாக நுணுக்கமான முறையில் LGBTQ நிலைப்பாடுகளை ஊக்குவிக்க முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்துவதாக ‘Daily Mirror’ செய்தி வெளியிட்டுள்ளது.
தொழில் சீர்திருத்தங்கள் என்ற போர்வையில், ஓரினச்சேர்க்கை மற்றும் திருநங்கைகள் (LGBTQ) சமூகத்திற்குரிய நிலைப்பாடுகளை சமூகமயமாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
C190 சமவாயத்தின் அடிப்படை நோக்கம் தொழிலாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். இருப்பினும், அதனுடன் இணைந்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மூலம் பாராளுமன்றத்திலோ அல்லது பொதுமக்களிடமோ பகிரங்கமாக விவாதிக்கப்படாத சமூக நிலைப்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதாக மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த ஜனவரி 9ஆம் திகதி தொழிலாளர் அமைச்சின் கேட்போர் கூடத்தில், பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் இந்த சர்ச்சை தீவிரமடைந்தது. அங்கு பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு அட்டை (Playing Cards) தொகுப்பு பிரதிநிதிகளின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கமான 52 அட்டைகளைக் கொண்ட தொகுப்பிற்குப் பதிலாக, இதில் உள்ள சில அட்டைகளில் பல்வேறு சித்திரங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள் (Cartoons) மூலம் குறிப்பிட்ட சில நிலைப்பாடுகளை ஊக்குவிக்கும் செய்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொழிற்சங்கத் தலைவரின் வெளிப்படுத்தல்
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் (பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன்) கருத்துத் தெரிவிக்கையில், தொழிலாளர் உரிமைகளை மறைப்பாக வைத்துக்கொண்டு LGBTQ அங்கீகாரத்தை ஊக்குவிக்கும் ஒரு “மறைமுக முயற்சி” இந்த அட்டைகள் மூலம் காட்டப்படுவதாகத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் மாத்திரமே இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் உள்ளடக்கங்கள் வேலைத்தளப் பாதுகாப்பையும் தாண்டி உணர்ச்சிகரமான சமூக விடயங்கள் வரை நீண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த அட்டைத் தொகுப்பானது ‘இலங்கை தேசிய மாலுமிகள் சங்கம்’ (NUSS) மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதன் உறையில் “இந்த அட்டைத் தொகுப்பு வேலைத்தள வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவர உதவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. டச்சு தொழிற்சங்க கூட்டமைப்பான FNV மற்றும் அதன் சர்வதேச பிரிவான Mondiaal FNV ஆகியவை இந்த பிரச்சாரத் திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன.
விசேடமாக, ‘Hearts 9’ அட்டை உள்ளிட்ட மேலும் சில அட்டைகளில் LGBTQ சமூகத்தினர் C190 சமவாயத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதைக் காட்டும் சித்திரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் சட்டங்களைப் பயன்படுத்தி பாரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிப்பதன் மூலம், பாராளுமன்றக் கண்காணிப்பு மற்றும் பகிரங்க மக்கள் கலந்துரையாடல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக சிவில் அமைப்பு பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
இலங்கையின் தற்போதைய சட்டச் சூழலில் ஓரினச்சேர்க்கை உறவுகள் இன்னும் சட்டவிரோதமாகவே கருதப்படும் நிலையில், இவ்வாறான சீர்திருத்தங்கள் உண்மையாகவே தொழிலாளர் நலனுக்கானதா அல்லது வேறு ஏதேனும் சமூக சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஜெனீவாவில் நடைபெற்ற 108வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட C190 சமவாயம், அரச மற்றும் தனியார் ஆகிய இரு துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பதுடன், இது “வேலை உலகம்” (World of Work) என்பதற்கு மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments :
Post a Comment