இலங்கை ஊடகத்துறையின் ஜாம்பவானும், புலனாய்வு இதழியலின் (Investigative Journalism) முன்னோடியுமான இக்பால் அத்தாஸ் அவர்களின் மறைவு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
சுமார் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் ஈடு இணையற்ற சேவையாற்றிய இக்பால் அத்தாஸ் அவர்கள், இலங்கை ஊடக வரலாற்றில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தார். குறிப்பாக, 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் அவர் எழுதிய "Situation Report" பத்திகள், இலங்கையின் பாதுகாப்புத் துறை மற்றும் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். BBC
மற்றும் CNN போன்ற சர்வதேச ஊடகங்களின் பாதுகாப்பு செய்தியாளராகவும் பணியாற்றி உலகத்தரம் வாய்ந்த ஓர் ஊடக ஆளுமையாகவும் அவர் திகழ்ந்தார்.
நாட்டில் போர் கடுமையாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில், உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதிலும், உண்மையை வெளிக்கொணர்வதில் அவர் காட்டிய துணிச்சல் ஊடகத்துறைக்கு என்றும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. பாதுகாப்புத் துறையில் இடம்பெற்ற ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்காக அவர் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்த போதிலும், ஒருபோதும் தனது கொள்கையிலிருந்து பின்வாங்காமல் துணிச்சலுடன் செயற்பட்டார்.
இக்பால் அத்தாஸின் நேர்மையான மற்றும் ஆழமான புலனாய்வுப் பணிகளுக்காக, சர்வதேச ஊடக சுதந்திர விருது (CPJ International Press Freedom Award) உள்ளிட்ட பல உயரிய சர்வதேச மற்றும் தேசிய விருதுகள் அவரைத் தேடி வந்தன. அன்னாரின் நீண்டகால ஊடகப் பணிகளைப் பாராட்டி, 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது வருடாந்த மாநாட்டின்போது அவருக்கு விசேட விருது வழங்கி கௌரவித்தது. அதே போன்று 2019 ஆம் ஆண்டில் முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த விசேட அனுபவப் பகிர்வு நிகழ்வில் அவர் கலந்துகொண்டு, தனது பல தசாப்த கால ஊடக அனுபவங்களை இளம் ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தமையும் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
இக்பால் அத்தாஸ் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இலங்கை ஊடகத்துறைக்கும், குறிப்பாக புலனாய்வு ஊடக பரப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ஊடக நண்பர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்னாரின் நற்கிரியைகளை எல்லாம்வல்ல இறைவன் அங்கீகரித்து, அவருக்கு உயரிய சுவனத்தை வழங்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
2026.01.13

0 Comments :
Post a Comment