யாழ்ப்பாணம், உடுவில் - மல்வம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


உடுவில் பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபரே நேற்றைய தினம் (25) இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு (25)மதுபோதையில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று காலை உறவினர்கள் அவரைத் தேடியபோது, வீட்டின் அருகிலுள்ள காணியொன்றில் இருந்த கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த நபர் இதற்கு முன்னரும் குறித்த கிணற்றுக்கட்டின் மீது அமர்ந்து மது அருந்தும் வழமையைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், நேற்றிரவும் அவர் போதையில் மது அருந்திக்கொண்டிருந்த வேளை, தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

சம்பவம் இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம், சடலம் மீதான மரண விசாரணைகளை மேற்கொண்டார். 

சுன்னாகம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-கஜிந்தன்-