நூருல் ஹுதா உமர்

நுவரெலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. நுவரெலியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் "கல்விக்காக கரம் கொடுப்போம்" என்ற தொனிப்பொருளில் கீழ் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை இதன்போது வழங்கினர்.
குறித்த நிவாரணப் உதவி நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.பி. திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவற்றில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், பாடசாலை சீருடைகள் , பாதணிகள் மற்றும் தொடர்ந்து தற்காலிகமாக முகாம்களில் தங்கி உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் தேவையான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பல்வேறு முக்கியமான பொருட்களை வழங்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் மோசமான காலநிலையால் 2,000 பாடசாலை மாணவர்களும், 150 ஆசிரியர்கள் நேரடியாக இடம்பெயர்ந்து உள்ளதாகவும், 35 பாடசாலைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 5 பாடசாலைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது என நிகழ்வில் பங்கேற்ற நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் உள்ள கல்முனை, கல்குடா, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு மேற்கு மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலய காரியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் , கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து குறித்த பொருட்களை சேகரித்து நுவரெலியா மாவட்டத்திற்கு நிவாரணமாக வழங்கியுள்ளனர்.
இதன்போது கிழக்கு மாகாணக் கல்விப் பணிமனை அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்முனை வலயக் கல்வி அலுவலக நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்கள் இந்தப் பொருட்களை வழங்குவதில் பங்கேற்றனர்.