சுனாமி பேரழிவின் 21ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், மயோன் சமூக சேவை அமைப்பு, மயோன் குழுமம் மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையுடன் மாபெரும் குருதிக்கொடை முகாம்  (27) சனிக்கிழமை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை காரியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த மனிதாபிமான நிகழ்வில் சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வருகை தந்த இளைஞர்கள், யுவதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தன்னார்வமாக இரத்ததானம் செய்தனர்.

உயிர்களை காப்பாற்றும் உயரிய நோக்குடன் நடத்தப்பட்ட இம்முகாமில் மக்களின் ஆர்வமும் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
கலந்து கொண்ட அனைவருக்கும் ஆரம்ப மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பாதுகாப்பான முறையில் இரத்தம் சேகரிக்கப்பட்டது.

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையிலும், எதிர்காலத்தில் அவசர மருத்துவ தேவைகளுக்காக இரத்த களஞ்சியங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த குருதிக்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.