சிறைச்சாலைகளில் அவசர நிலைமை ஏற்படும் போது பிராந்திய மட்டத்தில் ஒருங்கிணைப்பை பேணி, அரச நிறுவனங்களுக்கிடையில் கூட்டுப் பொறிமுறையொன்றை உருவாக்குவதன் மூலம் அவசர நிலைமைகளுக்கு பதிலளிப்பதுடன், கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நோக்கத்துடன் வேலைத்திட்டமொன்றை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பொறிமுறையை நிறுவுவது தொடர்பில் இன்று (19) முற்பகல் களுத்துறை சிறைச்சாலையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், பெண் கைதிகளை சந்தித்து அவர்களுக்குள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்:
"அவசர நிலைமைகளுக்கு பதிலளிப்பதையும் கைதிகளின் நலன்புரியையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு, அரச நிறுவனங்களை இணைத்து நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் இந்த கூட்டுப் பொறிமுறை நிறுவப்படும். கைதிகளுக்கான வசதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் தேவைகளை வழங்குவது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. கைதிகளின் உரிமைகள் மற்றும் நலன்புரி சேவைகள் உறுதி செய்யப்பட வேண்டும். சிறைச்சாலைகளுக்குள் சிநேகபூர்வமான, மனிதாபிமான சூழல் நிலவ வேண்டும். சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காக அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை துரிதமாகப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொறிமுறையை நிறுவுவதன் மூலம் சிறைச்சாலைகளில் ஏற்படும் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். பிரதேச அரச அதிகாரிகளின் தலைமையில் அமைக்கப்படும் இக்கூட்டுப் பொறிமுறை மாதத்திற்கு ஒருமுறை கூடி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது. கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சிறைச்சாலைகளின் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைக்கும் தற்போதைய முறைமை மேலும் விஸ்தரிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டும்."
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் மையமாகக் கொண்டு இந்த கூட்டுப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் களுத்துறை, காலி, பூஸ்ஸ மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளை மையமாகக் கொண்டு பிராந்திய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
அரச நிறுவனங்கள் இணைந்து அமைக்கும் இந்த கூட்டுக் குழுவின் அதிகாரிகள் மாதத்திற்கு ஒருமுறையாவது கூடி, உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட வேண்டும். அரச நிறுவனங்கள் இணைந்து கூட்டுப் பொறிமுறையொன்றை தயாரிப்பதன் மூலம் சிறைச்சாலைகளில் நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு முன்பே அதனை முன்கூட்டியே கண்டறியும் இயலுமை ஏற்படும்.
களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கிடையில் இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.
களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.எம்.எஸ். உபுல்தெனிய, களுத்துறை மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத், களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. ஐ. பத்மினி, 143 வது காலாட்படை பிரிகேட் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் அஸித புஷ்பகுமார, களுத்துறை கடற்படை இரண்டாவது கட்டளை அதிகாரி லெப்டினன்ட் ஏ.பி. ரணதுங்க, களுத்துறை உதவி பிரதேச செயலாளர் சி.ஜே.பி. கஜநாயக்க மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ், இராணுவம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, மின்சார சபை, சமூக சுகாதார வைத்திய அதிகாரி, களுத்துறை பிரதேச செயலகம், தீயணைப்பு படை உள்ளிட்ட அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.