✍️ எஸ்.என்.எம்.சுஹைல்
நேரடித் தொலைக்காட்சி விவாதத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவை மிகக்கடுமையாக விமர்சித்து மௌனமாக்கியுள்ளார். கல்விச் சீர்திருத்தம் குறித்துப் பேச வந்த சன்ன ஜயசுமன, அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க முயன்றபோது, அவர் கடந்த காலங்களில் முன்னின்று நடத்திய டாக்டர் ஷாபி விவகாரம் மற்றும் ஜனாஸா எரிப்பு விவகாரங்களை முன்வைத்து அமைச்சர் நளிந்த அவரைப் பதிலளிக்க முடியாமல் திணறடித்தார்.
சன்ன ஜயசுமனவின் அரசியல் பயணம் எப்படிப்பட்ட 'தகவல் சீர்குலைவு' மற்றும் 'போலி அறிவியல்' பின்னணியைக் கொண்டது என்பதன் சுருக்கமாக பார்ப்போம்.
1. டாக்டர் ஷாபி விவகாரத்தில் சன்னவின் 'தகவல் சீர்குலைவு'
2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிந்தைய சமூகப் பதற்றத்தைச் சன்ன ஜயசுமன மிகக் கச்சிதமாகத் தனது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டார்.
தேசிய சிங்கள பத்திரிகையில் வெளியான 4,000 பெண்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஆதாரமற்ற செய்திக்கு, ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த சன்ன ஜயசுமன தனது சமூக வலைத்தளம் வாயிலாக 'அதிகாரப்பூர்வ' அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தார். ஒரு கல்விமானாக அவர் சொன்ன தகவலை மக்கள் உண்மை என நம்பினர். இது டாக்டர் ஷாபிக்கு எதிரான ஒரு 'ஊடக விசாரணைக்கு' (Trial-by-Media) வழிவகுத்தது.
பின்னர் ஷானி அபேசேகர தலைமையிலான CID விசாரணையில், டாக்டர் ஷாபி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பது உறுதியானது. ஆனால், அதற்குள் சன்ன ஜயசுமன "சிங்கள நலன்களின் காவலர்" என்ற பிம்பத்தை உருவாக்கித் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
2. கட்டாய ஜனாஸா எரிப்பு: அறிவியலைப் பலிகொடுத்த அரசியல்
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களைப் புறந்தள்ளி, முஸ்லிம்களின் ஜனாஸாக்களைக் கட்டாயமாக எரிக்கச் செய்ததில் சன்ன ஜயசுமனவின் பங்கு மிக முக்கியமானது.
இறந்த உடல்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசடையும் என்ற எவ்வித அறிவியல் ஆதாரமுமற்ற கருத்தை முன்னிறுத்தினார் அப்போதைய பதி சுகாதார அமைச்சர்.
நிபுணர்கள் குழுவின் (Prof. Jennifer Perera Committee) பரிந்துரைகளைத் திட்டமிட்டே புறக்கணித்துவிட்டு, ஒரு 'தொழில்நுட்பக் குழுவின்' பின்னால் மறைந்து கொண்டு சிறுபான்மையினரின் மத உரிமைகளைப் பறிக்கும் கொள்கையை சன்ன ஜயசுமன்னவே நடைமுறைப்படுத்தினார்.
ஒருபுறம் அறிவியல்பூர்வமான அடக்கம் செய்யும் முறையை எதிர்த்தவர், மறுபுறம் 'தம்மிகா பானி' போன்ற போலி ஆயுர்வேத மருந்துகளைப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக ஊக்குவித்தார்.
3. பொறுப்புக்கூறலில் இருந்து நழுவுதல்
2024 இல் சன்ன ஜயசுமன வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது, தனது பழைய நிலைப்பாடுகளில் இருந்து முற்றிலும் முரணான தகவல்களைக் கூறினார். அடக்கம் செய்வதால் பாதிப்பில்லை என்பது தனக்கு முன்பே தெரியும் என்றும், புலனாய்வுப் பிரிவினரே தன்னைத் திசைதிருப்பினர் என்றும் கூறித் தப்பிக்க முயன்றார்.
"உடல்களைத் தோண்டி எடுத்து உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம்" என்ற அபத்தமான அச்சத்தைப் புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதிக்கு ஊட்டினர் எனக் கூறி, ஒரு கொள்கை வகுப்பாளராகத் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தார்.
பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் பின்னணி என்பது அறிவியலை அரசியலுக்குச் சாதகமாக வளைப்பதும், இனவாத ரீதியான தகவல் சீர்குலைவுகளை (Information Disorder) உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் அடைவதுமாகும். ஒரு கல்விமான் எப்படித் தவறான தகவல்களைக் கொண்டு ஒரு சமூகத்தையே திசைதிருப்ப முடியும் என்பதற்கு இவரது செயல்பாடுகள் ஒரு கசப்பான உதாரணம்.

0 Comments :
Post a Comment