இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை மொட்டு அரசாங்கம் உடன் கொல்லும் விஷம் என்றால் திசைகாட்டி அரசாங்கம் மெல்லக் கொல்லும் விஷமாகும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“கோட்டாபாய ராஜபக்சவின் தலைமையிலான மொட்டு அரசாங்க காலத்தில் முஸ்லிம்கள் நேரடியாக குறிவைத்து தாக்கப்பட்டனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலையிலான திசைகாட்டி ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல குறிவைக்கப்படுகிறார்கள். இதனை இந்நாட்டு முஸ்லிம்கள் கவனத்தில் எடுத்து சிந்திக்க வேண்டும்
கோத்தாபாய நமக்கு செய்த அநியாயங்களை நாம் இன்னும் மறக்க வில்லை. அவை நம்மை நேரடியாக குறிவைத்து செய்யப்பட்டவையாகும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான திசை காட்டி அரசாங்கம் நம்மை மெல்ல மெல்ல தாக்கி வருகின்றது.
இலங்கையில் இதற்கு முந்திய சகல அமைச்சரவையிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது.
இந்த அரசாங்கம் வந்தவுடனேயே அதனை இல்லாமல் செய்தது. அதுபோல இந்த ஜனாதிபதியினால் நியமிக்கப் பட்ட குழுக்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப் பட்டது.
தற்போது முஸ்லிம் கலாசாரத் திணைக்கள கட்டிடத்தை கையகப் படுத்த நடவடிக்கை எடுக்கப் படும் அதேவேளை ஜித்தா கொன்சுலட் பதவியிலிருந்து முஸ்லிம் பிரதித்துவம் அகற்றப் படவுள்ளது.
ஏன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இப்படி அநீதிகளை செய்து வருகின்றது என்று பல சமூக ஆர்வலர்கள் என்னோடு கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர்.
இந்தச் செயற்பாடுகளின் விளைவுகள் எதிர்காலத்தில் நமது சமூகத்திற்கு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். இதனை நியாயமாக சிந்தனையில் எடுத்துப் பார்ப்போர் இதன் விளைவுகளை புரிந்து கொள்வர்.
இந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகளின் பின்புலத்தில் யூதர்களின் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. அரசின் அண்மைய நகர்வுகள் குறித்து அவதானிக்கும் போது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
எனவே திசைகாட்டிக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல அநீதிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து இவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது முடியாவிட்டால் கண்மூடித்தனமாக அரசுக்கு முட்டுக் கொடுப்பதை விட்டு அரசுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கி அடுத்து வரும் தேர்தல்களில் அதனைப் பிரதிபலிக்க வேண்டும்.
எதிர்கால சமூகத்திற்கு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் அரசின் இந்த நகர்வுகளுக்கு தொடர்ந்து கண்மூடித்தனமாக முட்டுக் கொடுப்போர் அதன் பின் விளைவுகள் குறித்து சிந்திக்க வேண்டும்” என்றார்


0 Comments