Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள ஒன்றிணைவோம் - ஜனாதிபதி


எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். 
மலர்ந்துள்ள பராபவ சித்திரை புத்தாண்டுக்கான தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பௌதிக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் புதுமைபெறும் எதிர்பார்ப்பை அடையாளப்படுத்தும் சித்திரை புத்தாண்டு, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.

பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சுபவேளையில் செயற்படுவது இப்புத்தாண்டின் சிறப்பம்சமாகும்.

இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படும் கலாசாரம் உலகிற்கு முன்னால் எமது நாட்டின் தனித்துவத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை இந்த பெறுமதிமிக்க கலாசாரத்துடனும், சிறந்த வரலாற்று மரபுரிமையுடனும் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்று நாம் திடமாக நம்புகின்றோம்.

அதற்கமைய, எமது அனைத்து எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் அந்த பெறுமதிமிக்க மரபுரிமை மற்றும் கலாசாரத்தின் மீது வலுவாகக் காலூன்றித் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவுகூர வேண்டும்.

அதேபோல், சூரியப் பெயர்ச்சிக்கு இணையாக மேற்கொள்ளப்படும் அனைத்துச் சடங்குகளினதும் பொதுவான எதிர்பார்ப்பு, கூட்டுமுயற்சியை மதிக்கின்ற, மற்றவர்களினதும் இயற்கையினதும் இருப்புக்கு மதிப்பளிக்கின்ற ஒரு மனிதாபிமானமுள்ள புதிய மனிதனை உருவாக்குவதாகும்.

புத்தாண்டின் சடங்குகள் மூலம் வெளிப்படும் அந்த ஒற்றுமையின் பண்புகளும் விழுமியங்களும் அந்த சில நாட்களுக்கு மாத்திரமன்றி, வருடம் முழுவதும் எமது நடத்தையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

கடந்த வருடம் நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்த சவால்களின் போது உலகிற்கு வெளிப்படுத்திய எமது உள்வாங்கும் திறன் மற்றும் சகிப்புத்தன்மையைப் போலவே, மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களையும் திட்டமிட்ட முறையான முகாமைத்துவத்துடன் வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஒரு நாடாக ஒன்றிணைந்து இந்தச் சவால்களை வென்றெடுக்கும்போது, சித்திரை புத்தாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்படும் ஒற்றுமை மற்றும் பகிர்தல் போன்ற பண்புகளால் எமது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

பெற்றுக்கொண்ட வெற்றிகளை மேலும் உறுதிப்படுத்துவதுடன், எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என அழைப்பு விடுத்து, பிறந்துள்ள இச்சித்திரை புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.