அஸீம் கிலாப்தீன்
இலங்கை அரசியலில் ‘கூட்டணித் தர்மம்’ மற்றும் ‘தலைமைப் பிடிப்பு’ என்பவை எப்போதுமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளன. இந்த மரபுவழி அரசியலில் ஒரு புதிய திசையைச் சுட்டிக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் குருநாகல் உரை. இங்கு எழுப்பப்படும் கேள்விகள் வெறுமனே ஒரு நபரை இலக்கு வைத்தவை அல்ல; மாறாக, இலங்கையின் எதிர்க்கட்டுக்கோப்பையும் அதன் எதிர்கால திசையையும் தீர்மானிக்க வேண்டிய ஒரு வரலாற்றுத் தருணத்தின் கட்டாய வெளிப்பாடு. கடந்த கால நெருக்கடி நிலைமைகளின் போதும், இரண்டு முக்கியமான ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் ரிஷாட் பதியுதீன் வழங்கிய ஆதரவு சாதாரணமானதல்ல. களத்தில் வியூகங்களை அமைத்து, சிறுபான்மை மற்றும் தேசிய சமூகங்களை ஒருங்கிணைத்து அந்தத் தரப்புக்காக உழைத்தவர்கள் இவர்கள். ஆனால், அத்தகைய தியாகங்களும் ஆதரவுகளும் அந்தத் தரப்பிற்கான நிரந்தர அடிமைச் சாசனம் அல்ல என்பதை அவர் அழுத்திச் சொல்லியுள்ளார்.
ஜனநாயக அரசியலில் கூட்டு என்பது குறிப்பிட்ட காலத்தின் தேவைகளுக்காகவும் கொள்கை அடிப்படையிலும் உருவாக்கப்படுவது. மாறாக, தலைமை தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்திக்கும் பொழுதும், அதன் அணுகுமுறைகளில் மாற்றங்கள் இல்லாத பொழுதும், அக்கூட்டை மறுபரிசீலனை செய்வது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் தேசத்தின் ஆரோக்கியமான அரசியல் படியாகும்.
ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைமை என்பது அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக் கேட்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது; தானும் தன்னைச் சார்ந்த அணியும் சரியான திசையில் பயணிக்கிறதா என்பதைத் தொடர்ச்சியாகச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு தலைமை, மீண்டும் எதன் அடிப்படையில் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது?
தேசியப் பிரச்சினைகளை அணுகும் விதம், பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்படும் முதிர்ச்சி, பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தொலைநோக்கு போன்ற அடிப்படைகளில் அந்தத் தலைமை திருப்திகரமாக உள்ளதா? இத்தகைய கேள்விகளை எழுப்புவது கட்சிக்கு எதிரான துரோகமல்ல; மாறாக, கட்சியை வளர்க்கும் மற்றும் அதன் பலவீனங்களைச் சரிசெய்யும் உண்மையான தேசப்பற்று. ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஆளுமைமிக்க, பொருளாதாரப் புலமை பெற்ற பல திறமைசாலிகள் இருக்கும்போது, ஒற்றை நபரை மையப்படுத்திய அரசியல் தேக்கநிலையைத் தருமே தவிர நாட்டின் மாற்றத்திற்கு உதவாது. தற்போதைய அரசாங்கத்தின் நகர்வுகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து மக்கள் மத்தியில் ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்படுத்த வேண்டிய பிரதான பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு. ஆனால், சமகாலத்தில் எதிர்க்கட்சியின் சில நகர்வுகள் தேவையற்ற விவாதங்களிலும் பொருத்தமற்ற முறைகளிலும் திசைமாறுவது ஜனநாயகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.
மக்கள் உண்மையான பிரச்சினைகளால் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சி அதற்குரிய வலுவான மாற்றீட்டுத் திட்டங்களை முன்வைக்கத் தவறினால், அது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும்.
ரிஷாட் பதியுதீனின் இந்த ஆழமான அரசியல் சிந்தனையைச் சில ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் லாபத்துக்காகத் திரித்து வெளியிடுவது வேடிக்கையானது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடனடியாக அரசாாத்துடன் இணையப் போகிறது என்றோ, அடுத்த தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள் என்றோ ஆதாரமற்ற கதைககளை கட்டமைப்பது ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை மூழ்கடித்துவிடும்.
கருத்து வேறுபாடுகளையும் விமரிசனங்களையும் சாதிய, மத அல்லது இன ரீதியான பிரிவினைகளாக மாற்ற முற்படும் இத்தகைய போக்குகள், நாட்டு மக்களின் அரசியல் முதிர்ச்சியைச் சிதைத்துவிடும் அபாயம் கொண்டவை. அரசியல் என்பது ஒருபோதும் தனிநபர்களைப் பாதுகாப்பதற்கான கேடயம் அல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உன்னத கருவியாகும்.
எந்தத் தலைவராக இருந்தாலும், அவரின் செயற்பாடுகளையும் தகுதியையும் கேள்விக்குட்படுத்தும் உரிமை மக்களுக்கு உண்டு. கடந்த காலத்தில் ஒருவருக்கு ஆதரவளித்தோம் என்பதற்காக, எதிர்காலத்திலும் சிந்திக்காமல் அதே தவறான முடிவை எடுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் எமக்கில்லை. இலங்கைக்கு இப்போதே தேவைப்படுவது வெறும் மேடைப் பேச்சாளர்களோ அல்லது உணர்ச்சிவசப்பட்ட வாக்குவாதங்களோ அல்ல. மாறாக, தற்போதைய யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் தெளிவான பார்வை, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளும் தலைமைத்துவப் பண்பு, மக்கள் நலனை முதன்மையாக வைக்கும் கொள்கைசார் அரசியல் ஆகியவையே இப்போதைய அவசியத் தேவையாகும்.
ரிஷாட் பதியுதீன் எழுப்பிய இந்த விடயங்கள் தனிநபர்களைக் கடந்து கொள்கைகளைத் தேடும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்திற்கான வித்தாகவே பார்க்கப்பட வேண்டும். உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஆரோக்கியமான விமர்சனங்களும், மக்களின் நலனை முன்னிறுத்தும் உறுதியான அரசியலுமே நமது தேசத்தை முன்னோக்கி நகர்த்தும்

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.