Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

நுண்ணறிவை அறியும் முன்னறிவு: AI யை விஞ்சும் புதிய OI (Organoid Intelligence)


அஸீம் கிலாப்தீன்

இன்றைய தொழில்நுட்ப உலகில் 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence - AI) என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. AI தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதைவிட பல மடங்கு அதிநவீனமான, ஆற்றல் வாய்ந்த புதிய தொழில்நுட்பம் ஒன்று தற்போது உருவாகி வருகிறது. அதன் பெயர்தான் 'Organoid Intelligence OI. கணினியின் மூளையாகச் செயல்படும் சிலிக்கான் சிப்களுக்கு பதிலாக, உயிருள்ள மனித மூளைச் செல்களைக் கொண்டு கணினிகளை இயங்கச் செய்யும் புரட்சிகரமான ஆய்வில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். பேராசிரியை தாமஸ் ஹார்ட்டங் உள்ளிட்ட ஆய்வாளர்கள் முன்னெடுத்துள்ள இந்த தொழில்நுட்பம், எதிர்காலக் கணினி அறிவியலையே தலை கீழாக மாற்றப்போகிறது.


OI நுண்ணறிவைப் பற்றி அறிந்துகொள்ளும் முன், 'நுண்ணறிவு' என்ற கோட்பாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இயல்பாகவே நுண்ணறிவு உண்டு. உதாரணமாக, ஒரு குழந்தை அறியாமல் நெருப்பைத் தொட்டு சுட்டுக் கொண்டால், மூளையில் உள்ள நரம்பணுக்கள் அந்த வலியைப் பதிவு செய்துகொள்கின்றன. அடுத்த முறை நெருப்பைக் காணும்போது, மூளை எச்சரிக்கை செய்து கையை விலக்கச் சொல்கிறது. ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டு, அதனடிப்படையில் சுயமாக முடிவுகளை எடுக்கும் இந்தத் திறனையே 'நுண்ணறிவு' என்கிறோம். இதே நுண்ணறிவை செயற்கையாக, மென்பொருள்கள் மற்றும் Transformers மூலம் ஒரு கணினிக்குக் கொடுப்பதே செயற்கை நுண்ணறிவு. இதற்காக கணினிகளுக்கு CPU, GPU மற்றும் பிரத்தியேகமான NPU (Neural Processing Unit) போன்ற சிலிக்கான் சில்லுகள் பயன்படுத்தப்படுகின்றன.

செயற்கையான சிலிக்கான் சில்லுகளைப் பயன்படுத்தி மனித மூளையைப் போல கணினியைச் செயல்பட வைப்பதற்குப் பதிலாக, மூளையையே செயற்கையாக உருவாக்கி அதற்குக் கணினித் திறனைக் கொடுத்தால் என்ன என்ற சிந்தனையின் விளைவே இந்த OI. ஆய்வகங்களில் மனிதர்களின் Stem cells வளர்த்து, அதன் மூலம் செயற்கையான மூளைத் திசுக்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை Organoid Brains என அழைக்கப்படுகின்றன.

மனித மூளை செய்யும் அனைத்து அடிப்படைச் செயல்பாடுகளையும் இது செய்யும் ஆற்றல் கொண்டது. இந்த உயிரியல் மூளைக்கு, தரவுகளை உள்ளீடு செய்வதற்காக Electrodes பொருத்தப்படுகின்றன.இதன் மூலம் Electrical signals தகவல்கள் மூளைக்குக் கடத்தப்படுகின்றன.

ஒரு AI மென்பொருளுக்கு ஒரு வேலையைக் கற்றுக்கொடுக்க கோடிக்கணக்கான தரவுகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தேவைப்படும். ஆனால், ஆர்கனாய்டு நுண்ணறிவுக்கு அது செய்ய வேண்டிய வேலையின் விதிகளை மட்டும் கற்றுக் கொடுத்தால் போதுமானது. மனிதர்கள் கற்றுக்கொள்வதைப் போலவே இதுவும் விரைவாகக் கற்றுக்கொள்கிறது. இதனைப் பரிசோதிக்க, சில பிரபலமான காணொளி விளையாட்டு இதில் பயன்படுத்தப்பட்டது.

OI மூளைக்கு விளையாட்டின் விதிகள் மின் சமிக்ஞைகள் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டன. பின்னர், ஒரு சாதாரண கணினியையும், இந்த ஆர்கனாய்டு மூளையையும் விளையாடச் செய்தபோது, ஆர்கனாய்டு மூளை சாதாரண கணினியை விட இரண்டு மடங்கு அதிக முறை வெற்றி பெற்று வியப்பை ஏற்படுத்தியது.

தற்போது நாம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவை விட, இந்த ஆர்கனாய்டு நுண்ணறிவு பல மடங்குகளில் சிறந்தது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன:

ஒரு AI கணினி மையத்தை இயங்க வைக்க பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு OI அமைப்பு செயல்பட வெறும் 20 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே போதுமானது. அதிநவீன AI கணினிகளைக் குளிர்விக்க பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், OI அமைப்பு இயங்கச் சில மில்லிலிட்டர் நீரே போதுமானது.



AI-ஐப் பயிற்றுவிக்க பில்லியன் கணக்கான தகவல்கள் தேவை. ஆனால் OI அமைப்பு சில மெகாபைட் அளவிலான சிறிய தரவுகளைக் கொண்டே முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிடும்.

OI நுண்ணறிவு தற்போது ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. தற்போது ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டுள்ள ஆர்கனாய்டு மூளைகள் வெறும் ஒரு பட்டாணி (Pea) அளவிலேயே உள்ளன.

இதனை முழுமையான அளவில் மேம்படுத்தி, நடைமுறைக்குக் கொண்டுவர இன்னும் பல ஆண்டுகள் தொடர் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆயினும், இதுவரை இந்தத் தொழில்நுட்பம் காண்பித்துள்ள முன்னேற்றங்கள் கணினித் துறையில் மாபெரும் புரட்சிக்கான விதைகளாக அமைந்துள்ளன. செயற்கை நுண்ணறிவே உலகை ஆளப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இயற்கையான உயிரியல் கூறுகளையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் இந்த 'ஆர்கனாய்டு நுண்ணறிவு', மனித குலத்தின் எதிர்காலத்தையே மாற்றி எழுதும் வல்லமை கொண்டது என்பதில் சந்தேகமில்லை.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.