உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைலமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் பதிவுசெய்யப்பட்டுள்ள நிதி முன்னேற்றம் மற்றும் இலாபத்தன்மை தொடர்பில் குழு கவனம் செலுத்தியதுடன், அடைந்துள்ள முன்னேற்றத்தை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, கொழும்பு துறைமுகம் எதிர்கொண்டுள்ள பிராந்திய மற்றும் உள்நாட்டு போட்டித்தன்மை தொடர்பில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தின் வளர்ச்சி, உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களில் ஒன்றான MSC (Mediterranean Shipping Company) நிறுவனம் அத்துறைமுகத்தில் முதலீடு செய்துள்ளமை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான திட்டங்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் எதிர்கொள்ளக்கூடிய போட்டித் தாக்கங்கள் தொடர்பில் குழு அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், அவை தாமதமடைவதற்கான காரணங்கள், கொள்முதல் மற்றும் கேள்விப்பத்திர நடைமுறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அந்தத் தாமதங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதித் தாக்கங்கள் தொடர்பிலும் குழு விரிவாகக் கலந்துரையாடியது.
இதன்போது, தாமதங்களுக்கான காரணங்கள் தொடர்பில் முறையான கணக்காய்வொன்றை மேற்கொண்டு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. எதிர்காலத்தில் இவ்வாறான தாமதங்களைத் தவிர்ப்பதற்காக வினைத்திறன்மிக்க கொள்முதல் மற்றும் திட்ட முகாமைத்துவ நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் குழு சுட்டிக்காட்டியது.
ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் காங்கேசன்துறை உள்ளிட்ட பிராந்திய துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல், அவற்றைச் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு நிர்மாண நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு ஆற்றலை மேம்படுத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இறுதியாக, துறைமுக அதிகாரசபையின் திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்தல், நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், அரச நிறுவனமொன்றாக அதன் வினைத்திறன் மற்றும் இலாபத்தன்மையை மேலும் அதிகரித்தல் ஆகியவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என குழு வலியுறுத்தியது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, மஞ்சுல சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, தனுஷ்க ரங்கநாத் மற்றும் சாந்த பத்ம குமார ஆகியோரும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.









No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.