Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

முஸ்லிம் தாதியர்கள், கனிஷ்ட ஊழியர்களின் சீருடைப் பிரச்சினை: குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுக்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை!


அஸீம் கிலாப்தீன்

கல்முனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் நிலவிவரும் முஸ்லிம் கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் தாதியர்களின் சீருடை தொடர்பான விவகாரத்திற்கு உடனடியாக குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

இன்று காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஆளுங்கட்சியின் முஸ்லிம் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பில், கடந்த சில நாட்களாக பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ள இந்த உணர்வுபூர்வமான விவகாரம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களும் விரிவாகக் கேட்டறியப்பட்டன.

வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பினை எவ்வித சிக்கல்களுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுதல், சேவை பெறுநர்களுக்கு விரைவாகவும் செயற்திறனாகவும் சேவைகளை வழங்குவதை உறுதிசெய்தல், வைத்தியசாலைப் பணியாளர்களிடையே ஒற்றுமையைப் பேணுதல் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் நடைமுறைச்சாத்தியமான தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் ஆகியவை இங்கு வலியுறுத்தப்பட்டன.

இதற்கு முன்னரும் பல தடவைகள் ஆராயப்பட்ட இச்சீருடை விவகாரத்திற்கு, உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகளுடன், எதிர்காலத்தில் இவ்வாறான முரண்பாடுகள் மீண்டும் எழாத வகையில் நீண்டகால நிரந்தரத் தீர்வை வகுத்து விரைவாகச் செயற்படுத்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது கவனம் செலுத்தினார்.

இந்த விசேட கலந்துரையாடலில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, எம்.கே.எம். அஸ்லம், முஹம்மட் பைசல் மற்றும் கே. இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.







No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.