Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


நிலக்கரி இறக்குமதி விவகாரம்: குமார ஜயகொடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானமும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிரடியும்!


எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், நேற்று நாடாளுமன்றத்தில் 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 49 வாக்குகளும், எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு 159 ஆசனங்கள் இருக்கும் நிலையில், இத்தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒரு அதிசயமாகவே இருந்திருக்கும். இந்த யோசனையை முன்வைத்த எதிர்க்கட்சிகளுக்கும் இதன் முடிவு முன்னரே தெரிந்திருக்கும்.

எதிர்பாராத திருப்பமாக, 2009ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கொள்வனவு தொடர்பாக விசாரணை செய்ய, முழு அதிகாரமும் கொண்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாதாரண ஆணைக்குழுக்களுக்கும், விசேட ஆணைக்குழுக்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உண்டு.

விஜயகுமாரதுங்க கொலை, லலித் அத்துலத்முதலி படுகொலை முதல் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வரை அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்தும் 'பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகளாகவே' இருந்தன. அவை வெறும் பரிந்துரைகளை மட்டுமே வழங்கின. ஆனால், விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நீதியரசர்களுக்குக் கட்டற்ற அதிகாரம் இருக்கும். விசாரண முடிவில் குற்றவாளிகளாக இனம் காணப்படுபவர்களின் பிரஜாவுரிமையை நீக்கவும், ஆயுள் தண்டனை வழங்கவும் அல்லது பில்லியன் கணக்கான ரூபாய்களை நட்டயீடாக அறவிடவும் இவர்களுக்கு அதிகாரம் உண்டு. எனவே, இது ஒரு 'கண்துடைப்பு' குழு கிடையாது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி (டி.வி. ஜானகர்) குறிப்பிடுவது போல, அமைச்சர் குமார ஜயகொடி 2,500 கோடி ரூபாய் ஊழல் செய்தாரா? அப்படிப்பட்ட ஒருவரைத்தான் அரசு காப்பாற்றுகிறதா? தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டமே மின்சாரக் கட்டண அதிகரிப்புக்குக் காரணம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியதா? போன்ற காரசாரமான கேள்விகள் நாடாளுமன்றத்தை உலுக்கின.

கடந்த ஒரு வாரமாக அமைச்சர் பதவி விலகப்போவதாக வதந்திகள் பரவினாலும், அவர் நிலக்கரி இறக்குமதியில் ஊழல் செய்ததாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனினும், 2015ஆம் ஆண்டு அவர் அதிகாரியாக இருந்தபோது லஞ்ச ஊழல் ஒழிப்புத் திணைக்களம் தொடுத்த ஒரு வழக்கில் அவர் தற்போது பிணையில் உள்ளார். உலக வரலாற்றிலேயே பிணையில் இருக்கும் ஒரே அமைச்சர் இவராகத்தான் இருக்கக்கூடும்.

"கை சுத்தமான ஆட்சி" எனப் பேசும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு இந்த வழக்குத் தெரியாமல் இருக்காது. ஒருவேளை அவருக்கு வழங்கப்பட்ட அபார நம்பிக்கையினால், அவர் வழக்கிலிருந்து மீண்டு வருவார் என ஜனாதிபதி நம்பலாம். ஆனால், குமார ஜயகொடியின் இடத்தில் யார் இருந்தாலும் இந்த நிலக்கரி விவகாரத்தில் சிக்கியிருப்பார்கள் என்பதுதான் யதார்த்தம்.

நிலக்கரி இறக்குமதி என்பது நீண்டகாலமாகவே ஊழல் மலிந்த ஒரு துறையாகப் பார்க்கப்படுகிறது. 2010 முதல் 2026 மார்ச் வரை 462 நிலக்கரி கப்பல்கள் வந்துள்ளன. 2010 - 2015 காலப்பகுதியில் பகிரங்க டெண்டர் எதுவுமின்றி தமக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று ஊழலுக்கு எதிராகப் பேசும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே அப்போது அமைச்சராக இருந்தார். அதேபோல் நல்லாட்சி காலத்தில் அமைச்சராக இருந்த அஜித் பி. பெரேரா காலத்திலும் 1.5 மில்லியன் டாலர் நட்டம் ஏற்பட்டதாக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த முறை இறக்குமதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைமுகங்களின் தர அறிக்கைகள் (Loading & Discharging Port Reports) பெறப்பட்டுள்ளன. இவ்வளவு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டும் தரத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நட்டத்தை (17 மில்லியன் டாலர்) சம்பந்தப்பட்ட நிறுவனமே ஏற்க முன்வந்துள்ளது. எனினும், தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி: 1381 GW
நடப்பு உற்பத்தி: 1131 GW
குறைபாடு: 250 GW

இந்தக் குறையை நிவர்த்தி செய்ய அதிக விலையில் டீசலை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இது டொலர் கையிருப்பைக் குறைப்பதுடன் மின்கட்டண அதிகரிப்புக்கும் வழிவகுக்கிறது.

குறைந்த விலைக்குக் கேட்கும் தரமற்ற நிறுவனங்களைத் தவிர்த்து, தரமான நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கும் பொறிமுறையை அரசு உருவாக்க வேண்டும். இல்லையேல், சஜித் பிரேமதாச போன்ற அரசியல்வாதிகளின் போராட்டங்களுக்கும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் அரசு தொடர்ந்து முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

புதிய ஜனாதிபதி ஆணைக்குழு 2009 இலிருந்து விசாரணைகளைத் தொடங்கினாலும், தற்போதைய குமார ஜயகொடி சம்பந்தப்பட்ட விவகாரத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். நிலக்கரி மாபியாக்களின் ஆதிக்கத்தை உடைத்து, மெத்தனப் போக்கைக் கைவிட்டு அரசு துணிச்சலாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.